Thursday, 11 February 2016

Mariyaayin Maasatra Iruthayatthirku Muzhu Arppanam


மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு

    முழு அர்ப்பணம் 


மாசில்லா மரியாயே வாழ்க!
Ave Maria Immaculata!

புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் முறைப்படி 
சேசுநாதருக்கு மரியாயின் வழியாக 
முழு அர்ப்பணம் 

(33 நாட்கள் முழு அர்ப்பண தயாரிப்பு)

பாத்திமா செய்தியின் அடிப்படையிலும் 
மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியின் அடிப்படையிலும் 
பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது 

முன்னுரை 

பாத்திமாவில் தேவ மாதா சேசு கிறிஸ்துநாதருடைய மாபெரும் செயல் திட்டத்தை நமக்கு வெளிப்படுத்தினார்கள். "சேசு மரிய இருதயங்கள் இரக்கமுள்ள திட்டங்களை உங்களுக்கென வைத்துள்ளார்கள்" என பாத்திமா சம்மனசானவரும், "என் மாசற்ற இருதய பக்தியை உலகில் ஏற்ப்படுத்த சேசு விரும்புகிறார்" என மாதாவும் கூறினார்கள்.
லூசியாவின் மூலமாய் நம் ஒவ்வொருவருக்கும் மாதா சொல்வது என்னவெனில்: "மக்கள் என்னை இன்னும் அதிகமாய் அறிந்து நேசிக்கும்படி சேசு உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார்" (ஜூன் 13, 1917). அதேபோல் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் கூறுகிறார்: "ஆசீர்வதிக்கப் பெற்ற தம் அன்னை இதுவரையில் இருந்ததைவிட அதிகமாக அறியப்பட வேண்டும், அதிகமாக நேசிக்கப்பட வேண்டும், அதிகமாக மதிக்கப்பட வேண்டும் என கடவுள் விரும்புகிறார். நான் கூறப்போகும் அந்தரங்க, உத்தமமான (முழு அர்ப்பண) பயிற்சியை முன்குறிக்கப்பட்டவர்கள் செய்யப் புகுவார்களானால் கடவுளின் இவ்விருப்பம் நிச்சயம் நிறைவேறும்" (உண்மை பக்தி எண். 55)  

 நாம் ஒவ்வொருவரும் இத்திட்டத்தைச் செயல்படுத்த அழைக்கப் பட்டிருக்கிறோம்!. நமது முழு அர்ப்பணத்தாலும் மரியாயின்மாசற்ற இருதய பரிகார பக்தியாலும் சேசு நம்மை "மரியாயின் மாசற்ற இருதய அப்போஸ்தல" அலுவலாகிய  அவருடைய "இரக்கத்தின் திட்டத்திற்கு" தயாரிக்க விரும்புகிறார்.
"பிந்திய காலத்தின் இவ்வப்போஸ்தலர்கள்"  புனித லூயிஸ் மோன்போர்ட் கூறுகிறபடி "இவ்வரசியின் பிரஜைகளாகவும் அன்பின் அடிமைகளாகவும் தங்களை முழுவதும் அர்ப்பணிப்பார்கள். .... தாங்கள் சேசு கிரிஸ்துநாதருக்கு முழுச் சொந்தமாகும்படி தங்களை முழுவதும் எவ்வித மறுப்புமின்றி ஆன்மா சரீரம் யாவற்றையும் இவ்வன்னைக்கு முழுச் சரணாகத் தந்து விடுவார்கள்.

      தங்கள் முழு அர்ப்பணத்தினாலும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்வதாலும் பாத்திமா மாதாவின் இந்த அவசர அழைப்புக்கு செவி மடுக்க விரும்பும் பாரம்பரிய கத்தோலிக்கர்களுக்காக இந்த வலைத்தொடர் (Website) வெளியீடு தயாரிக்கப் பட்டுள்ளது. 

  இதுவே இன்று நம் தேவ அன்னை சாத்தானின் தலையை நசுக்கவும் திருச்சபைக்குள்ளும் உலகம்  முழுவதிலும் நிலவி வரும் நவீன தப்பறைகளை விரட்டியடிக்கவும்   நாம் வழங்கும் மிக வலிமை வாய்ந்த ஒத்துழைப்பாகும்.

    மரியாயின் மாசற்ற இருதத்திற்கு மிக உத்தமமான விதத்தில் முழு அர்ப்பணம் செய்ய விரும்புவோருக்கு இவ்வெளியீடு மிகச்சிறந்த உதவியாய் அமைவதோடு, பாரம்பரிய முறையில் தியானம் செய்ய விரும்புவோருக்கு, குறிப்பாக ஞான உரையாற்ற பாரம்பரிய குருக்கள் கிடைக்காத சமையங்களில், மிக உதவியாய் இருக்கும்.

   மேலும் உயர்வான உத்தமதனத்தை அடைய விரும்புவோர் இதை அனுதின தியானத்திற்கும் ஞான வாசகத்திற்கும் பயன்படுத்தி, சேசு, மரியாயின் புண்ணியங்களைப் பயிற்சி செய்யவும் சேசு, மாமரியை ஆழ்ந்து அறிந்து நேசித்து அவர்களோடு ஒன்றிக்கவும் இது ஒரு வலிமை மிக்க வழிகாட்டியாக இருக்கும்.

   இந்த வலைத் தொடரானது 1988 மரியாயின் ஆண்டு நினைவாக, இந்தியாவில் உள்ள மரியாயின் மாசற்ற இருதய "பரிகார சபை" இயக்குநரால் தயாரிக்கப்பட்டது. மாதாவின் இரக்க, வல்லப, வரப்பிரசாத திட்டம் நிறைவேறி "சிவந்த பறவை நாக"மாகிய நவீன தப்பறைகள் மேல் வெற்றி கொண்டு , இவ்விதமாய் கத்தோலிக்க திருச்சபையானது தனது சுய சிறப்பு அலங்காரத்திற்குத் திரும்பிவர இது ஏதுவாய் இருக்கும்.

    மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு பாரம்பரியமான முறையில் முழு அர்ப்பணம் செய்ய உண்மையாகவே விரும்புவோருக்கு உதவியும் வழி காட்டுதலும் வழங்கப்படும்.

     இந்த வலைத் தொடருக்கு ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க உதவிய திருமதி கபிரியேல் டுக்காஸே (இங்கிலாந்து), மற்றும் தட்டெழுத்து வடிவமைத்த திருமதி பெர்னர்தீன் டுமேலி (கானடா) ஆகியோரை இங்கு நினைவு கூராமல் இருக்க முடியாது. இவர்கள் இருவருமே மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு முழு அர்ப்பணம் செய்து இவ்வலுவலில் மிகுந்த அன்புடனும் ஈடுபாட்டு உணர்வுடனும் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

                                                                            சுவாமி பங்கிராஸ் M. ராஜா 
                                                                                           இயக்குநர் 
                                                                                      "பரிகார சபை" 
அலைபேசி: 9360250211
மின் அஞ்சல்: pancrasraja@gmail.com  



புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் முறைப்படி 
சேசுநாதருக்கு மரியாயின் வழியாக 
முழு அர்ப்பணம் செய்வதற்கு 

33 நாட்கள் முழு அர்ப்பண தயாரிப்பு 

(பாத்திமா செய்தியின் அடிப்படையிலும் மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியின் அடிப்படையிலும் பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது) 

   "சேசு கிறிஸ்து நாதரைப்பற்றிய அறிவும் அவருடைய அரசும் இவ்வுலகில் வருமானால் - அது நிச்சயமாக வரும் - அது பரிசுத்த கன்னி மரியாயைப்பற்றிய அறிவும் அவர்களது ஆட்சியும் உலகில் வருவதின் தவிர்க்க முடியாத விளைவாகவே வரும்" (உண்மை பக்தி எண். 13)

     புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் முறைப்படி மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு முழு அர்ப்பணம் என்பது "சேசு கிறிஸ்து நாதருக்கு முழுவதும் சொந்தமாகும்படி நம்மை முழுவதும் புனிதமிக்க கன்னி மரியாயிக்கு கொடுத்து விடுவதில்" அடங்கியிருக்கிறது.

     இந்த முழு அர்ப்பணத்தை பலனுள்ள வகையில் செய்வதற்கு நாம் நம்மையே உண்மையுடனும் மிகுந்த கரிசனையுடனும் 33 நாட்கள் தயார் செய்ய வேண்டும்.

     இந்த 33 நாட்களும் நமதாண்டவரின் 33 ஆண்டு உலக வாழ்க்கையைக் குறித்துக்காட்டும் 33 நாள் தியானம் ஆகும். புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் நிறுவிய ஞான ஜீவிய உணர்வின் அடிப்படையில் இத்தியான சிந்தனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

     33 நாட்களில் முதல் 12 நாட்கள் (முதல் பாகம்) 

சேசு கிறிஸ்து நாதருடைய உணர்வுகளுக்கு நேர் எதிரான உலக உணர்வுகளிலிருந்து நம்மையே வெறுமையாக்குவதில் செலவிடப்பட வேண்டும். 

     33 நாட்களில் அடுத்த 3 வாரங்கள் (இரண்டாம் பாகம்)

தேவ மாதாவின் வழியாக சேசு கிறிஸ்து நாதருடைய உணர்வுகளால் நம்மை நிறைப்பதில் செலவிடப்பட வேண்டும்.

     முதல் வாரம் 

தன்னையே அறிவதில் செலவிடப்பட வேண்டும்.

     இரண்டாம் வாரம் 

மாதாவை அறிவதில் செலவிடப்பட வேண்டும்.

     மூன்றாம் வாரம் 

சேசு கிறிஸ்து நாதரை அறிவதில் செலவிடப்பட வேண்டும்.

இந்த விதமான தயாரிப்புகளுடன், நமது அர்ப்பணத்தில் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வாழ்வதற்கு உறுதுணையாய் இருக்கும் சில வெளியரங்க பயிற்சிகளையும் அந்தரங்க பயிற்சிகளையும் புனித லூயிஸ் மோன்போர்ட் ஏற்படுத்தியிருக்கிறார்.

ஆன்மீகப் பயிற்சிகள்:

1. குறிக்கப்பட்ட ஜெபங்களை பிரமாநிக்கமுடனும் ஆர்வத்துடனும் சொல்வது. ஞான வாசகங்களைக் கருத்துடன் வாசிப்பது. தினசரி தியானங்களை நன்கு செய்து அதில் அடங்கியுள்ள படிப்பினைகளைக் கண்டுபிடிப்பது.

2. தினசரி தியானத்திற்கு 10 முதல் 30 நிமிடங்கள் அவசியம் தேவை. முந்தின நாள் மாலையிலேயே தியான கருத்துக்களை வாசித்து, மறுநாள் காலை தியானத்தின் சத்தியம் என்னவென்பதை நினைவில் பதித்துக்கொள்ள வேண்டும்.  தியான முடிவில் எப்போதும் சேசு, மாதாவுடன் அன்புடன் உரையாடி ஒரு உறுதியான் தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. பக்தி வைராக்கியமுடன் ஒருசில புண்ணியங்களைப் பயிற்சி செய்து, அவைகளின் வளர்ச்சிபற்றிய விபரங்களை உன்னுடைய ஆத்தும சோதனையின்போது குறித்துக்கொள்.

4. தினசரி திவ்விய பலி பூசை கண்டு திவ்ய நன்மை வாங்கு. இதைச்செய்ய முடியாமல் இருப்பவர்கள் சேசுநாதருடன் நெருங்கிய ஒன்றிப்பில் மாதாவுடன் வாழ்வதற்காக ஆன்மீக முறையிலாவது ஞான நன்மை வாங்கவேண்டும்.

     இங்கே கொடுக்கப்பட்டுள்ள தியான சிந்தனைகளையும் ஞான வாசகங்களையும் பயன்படுத்தி யாவரும் 33 நாள் ஞான தியான பயிற்சியினை செய்து முடிக்கலாம்.


முதல் பாகம்


முதல் பிரிவு 

பன்னிரண்டு தொடக்க நாட்கள் 

கருத்து: சேசு கிறிஸ்து நாதருடைய உணர்வுகளுக்கு நேர் எதிரான உலக உணர்வுகளிலிருந்து நம்மையே வெறுமையாக்குவது


முழு அர்ப்பண தயாரிப்பின் முதலாவது அலுவல் உலக உணர்வுகளி லிருந்து வெறுமை ஆவதில் அடங்கியிருக்கிறது. உலக உணர்வு என்பது முக்கியமாய் நம்மேல் கடவுளுக்கிருக்கும் உயர் அதிகாரத்தை எதிர்ப்பது ஆகும். இந்த எதிர்ப்பானது பாவத்தினாலும் கீழ்ப்டியாமையினாலும் வெளிக்காட்டப் படுகிறது

இவ்விதமாய் அது கிறிஸ்து நாதருடைய உணர்வுகளுக்கும் மரியாயினுடைய உணர்வுகளுக்கும் எதிரானதாய்  இருக்கிறது.  உலக உணர்வானது "சரீர இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவியத்தின் அகங்காரமுமாய் இருக்கின்றது". (1 அரு. 2: 16) அதன் செயல்களோவெனில் சகல வகைப் பாவங்களும், பாவத்திற்கு இட்டுச்செல்ல பசாசு பயன்படுத்தும் சகல சந்தர்ப்பங்களுமாம் .

ஆகவே முழு அர்ப்பணத்திற்காக தங்களையே தயாரிக்கிறவர்கள் முதன் முதலில் பாவத்தையும் பாவத்திற்கு இட்டுச்செல்லும் சகல சந்தர்ப்பங்களையும்  தூரமாய் விட்டு விலக வேண்டும். 

இந்த 12 நாட்களும் அவர்கள் கீழ்காணும் ஆத்தும சோதனை செய்ய வேண்டும்.

நான் உலகை நேசிக்கிறேனா? - உலகின்மேல் ஒரு பற்றுதல் வைத்திருக்கிறேனா? - எந்த பொருட்கள், இடங்கள், ஆட்கள் மேலாவது பற்றுதல் கொண்டிருக்கிறேனா? - என்னிடம் ஏதாவது பாவப் பழக்கம் இருக்கிறதா? - நான் பாவத்தில் விழக்கூடிய ஆபத்தில் இருக்கிறேனா? - உலகக்  கவர்ச்சிகளால் இழுக்கப்பட் டிருக்கிறேனா? - சௌகரியங்களையும் சுகங்களையும் தேடுகிறேனா ? - செல்வத்தையும் பாணிகளையும் வெறுப்பதற்குப் பதிலாக அவைகளை நாடுகிறேனா? - கண்ணடக்கத்தைப் பயிற்சி செய்கிறேனா? - சுய சிநேகத்தையும் சுய சந்தோஷத்தையும் ஒறுத்திருக்கிறேனா? - இருதயத்தில் தாழ்ச்சி உள்ளவனாய் இருக்கிறேனா?

இந்த 12 நாட்களும் அனுசரிக்க வேண்டிய புண்ணியங்கள்

தன்னையே மறுத்தல்
தரித்திரத்தை நேசித்தல் 
மறைந்து வாழ்தல் 
தாழ்ச்சி 
கற்பு 
உண்மை உள்ளவனாய் இருத்தல் 
கீழ்ப்படிதல்  


இந்த 12 நாட்களும் சொல்லவேண்டிய ஜெபங்கள்



 தியானத்திற்கு முன் ஜெபம்:

 ஸ்பிரிதுஸ் சாங்க்துவே தேவரீர் எழுந்தருளி வாரும், உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதினால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்

 
ஜெபிப்போமாக 

 சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை ஸ்பிரிதுஸ் சாங்க்துவின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த ஸ்பிரிதுஸ் சாங்க்துவினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிரகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும். - ஆமென்.  

 1) வாரும் ஸ்ருஷ்டிகர் ஸ் பிரித்துஸ்  (பக்.         )
2)  ஆவே மாரிஸ் ஸ்தெல்லா (பக்.   )
3) என் ஆத்துமம் ஆண்டவரை (பக்.    )

 மாதாவை நோக்கி ஜெபம் 

  மாசில்லா மரியாயே! ஸ்பிரித்துஸ் சாங்க்துவின் பத்தினியே, சேசுநாதருடையவும் என்னுடையவும் தாயாரே, என் ஆசிரியையே இராக்கினியே, நான் சேசுநாதருக்கு முழுவதும் சொந்தமாகும்படி உமக்கு என்னை முழுவதும் கையளிக்கிறேன்ஸ்பிரித்துஸ் சாங்க்துவி னிடமிருந்து எனக்கு வெளிச்சமும் வல்லமையும் பெற்றுத் தந்து என்னை உலக உணர்வுகளிலிருந்து சுத்திகரித்தருளும்.

தியானத்திற்குப் பின் ஜெபம்:

கிறிஸ்துவினுடைய ஆத்துமமானதேஎன்னை அர்ச்சிஷ்டவ னாகச்  செய்தருளும்கிறிஸ்துவினுடைய திருச்சரீரமேஎன்னை இரட்சித்துக் கொள்ளும்கிறிஸ்துவினுடைய திரு இரத்தமே, எனக்கு திருப்தி உண்டாகப்பண்ணியருளும்.  கிறிஸ்துவினுடைய விலாவில் நின்று ஓடி விழுந்த திருதண்ணீ ரே, என்னைக் கழுவிய ருளும்.  கிறிஸ்துவினுடைய திருப் பாடுகளே, எனக்கு தேற்றரவு உண்டாகப் பண்ணியருளுங்கள். ஓ நல்ல சேசுவே, நான் கேட்கிறதைத் தந்தருளும். உம்முடைய திருக் காயங்களுக்குள்ளே என்னை மறைத்துக் கொள்ளும். என்னை உம்மை விட்டுப் பிரிய விடாதேயும். துஷ்ட சத்துருக்களிடத்தில் நின்று என்னை இரட்சித்துக்கொள்ளும். என் மரணத் தரறுவாயில் நீர் என்னை அழைத்து உம்முடைய சந்நிதியில் உட்பட்ட சகல அர்ச்சிஷ்டவர்களோடு கூட நான் உம்மை ஊழியுள்ள காலம் ஸ்தோத்திரம் பண்ணும்படி அடியேன் உம்முடைய சந்நிதியில் வரக் கற்பித்தருளும். - ஆமென்.  




பன்னிரண்டு தொடக்க நாட்களில் 

1- வது நாள்.

கருத்து: சேசு கிறிஸ்து நாதர் தம்மைப் பின்செல்லும்படி நம்மை அழைக்கிறார்  

இங்கு நமதாண்டவரும் இரட்சகருமாகிய சேசு கிறிஸ்து நாதர் தமது மகா  பரிசுத்த மாதாவின் கரங்கள் வழியாக நம்மை முற்றாகவும் முழு மையாகவும்   அவருக்கு அர்ப்பணிக்க அழைக்கிறார். ஏனெனில் இதுவே நாம் சேசு கிறிஸ்து நாதருக்கு உண்மையான சீடர்கள் ஆவதற்கு மிகவும் பாதுகாப்பானதும் மிகவும் அழகானதுமான வழியாகும்.

தியான சிந்தனைக்குரிய காட்சி 


கிறிஸ்து நாதருடைய பாடுகளையும் மரணத்தையும்  எதிர்த்த இராயப்பரை ஆண்டவர் கடிந்துகொள்கிறார் (மத். 16: 21-24)
"சாத்தானே என் பின்னாலே போ; எனக்கு நீ இடறலாய் இருக்கிறாய். நீ சர்வேசுரனுக் கடுத்தவைகளையல்ல மனுஷருக் கடுத்தவைகளையே சிந்திக்கிறாய் என்றார்." 23

சேசுநாதருடைய சீடர்கள் ஆவதற்கான அடையாளங்கள் 

("சிலுவையின் நண்பர்கள்". புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்  எழுதியது - எண் . 11 - 62)

நமது திவ்விய இரட்சகர் சொன்ன அதிசயமான வார்த்தைகளை நன்கு சிந்திப்பாயாக, "யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகம் செய்து தன்  சிலுவையை அநுதினமும் சுமந்துகொண்டு, என்னைப் பின்செல்லக்கடவான்." (லூக். 9: 23)

கிறிஸ்தவ உத்தமதனம் எதில் அடங்கியிருக்கிறது என்றால்:

1. உத்தமன் ஆவதற்குத் தீர்மானிப்பதில் (மனதாய் இருந்தால்)
2. தன்னையே மறுத்து பயிற்சிப்பதில் (தன்னைத்தானே பரித்தியாகம்           செய்து)
3. துன்பத்தை ஏற்பதில் (தன் சிலுவையை சுமந்துகொண்டு)
4. சேசு கிறிஸ்துநாதரை அநுசரிப்பதில் (என்னைப் பின்செல்லட்டும்)  
     அதாவது கிறிஸ்துநாதரைப்போல் செயல்படுதல்.


கிறிஸ்தவ உத்தமதனத்தின் இந்த 4 அடியாளங்களையும் விவரிப்போம் 


1. ஒரு புனிதன் ஆவதற்குத் தீர்மானிப்பது (உத்தமன் ஆக                                          மனதாயிருத்தல்)

"யாதொருவன் ... மனதாய் இருந்தால்" = உண்மையாகவே, அதாவது   சுபாவத்தினாலோ, பழக்கத்தினாலோ, சுய சிநேகத்தினாலோ, சுய நலத்தினாலோ அல்லது முகத்தாட்சணியத்தினாலோ தூண்டப்படுகிற தீர்மானமாய் இராமல்,  சகலத்தையும் வெல்லும் தேவ (ஸ்பிரிதுஸ் சாங்க்துவின்) வரப்பிரசாதத்தினால் தூண்டப்பட்டு ஒருவன் புனிதன் ஆக விரும்புவது.

ஏனெனில் ஒருவன் கல்வாரி மலையில் ஏறுவதற்கு, அவன் தைரியவானாய், வீர தீரனாய், துணிகரமுடன் உலகத்தையும் பசாசையும் தன் சொந்த சரீரத்தையும் சுய ஆசைகளையும்  உதாசீனம் செய்கிறவனாய் இருக்க வேண்டும். சேசு கிறிஸ்து நாதருக் காக எல்லாவற்றையும் துறப்பதற்கும், எதையும் தாங்கிக் கொள் வதற்கும், எவ்வளவு துன்பபப்படுவதற்கும்  தீர்க்க சிந்தையுள்ள வனாய் இருக்க வேண்டும்.

இத்தகைய தீர்க்க சிந்தை இல்லாத மனிதன் ஒற்றைக் காலில் நடக்கிறவனாகவும் ஒற்றைச் சிறகால் பறக்கிறவனாகவுமே இருப்பான்! இவன் இந்த முழு அர்ப்பணத்தின் அழைத்தலுக்கு அருகதை உள்ளவன் அல்ல.

சேசுநாதர் சுவாமி சிலுவையை அணைத்துக்கொண்டு  அதன் தெய்வீக அரவணைப்பில் சாவதர்க்காகவே இந்த உலகிற்கு வந்தார். எனவே தாராள மனதோடும் விருப்பமுள்ள இருதயத்தோடும் சிலுவையை நேசிப்பாயாக.

2. தன்னைத்தானே பரித்தியாகம் செய்தல் (தன்னையே மறுத்தல்)

"அவன் தன்னைத்தானே பரித்தியாகம் செய்யக்கடவான்" 

எவ்வளவோ புறக்கணிக்கப் பட்டவராகவும்  சிலுவையில் அறையப் பட்டவராகவும்  இருந்த சேசுநாதரைப் பின்செல்ல விரும்புகிறவன், அவருடைய தரித்திரத்திலும், அவமானத்திலும் அவருடைய சிலுவையின் பாடுகளிலும் மட்டுமே மகிமை அடைய வேண்டும். 

தங்களைக் குற்றம் சாட்டும்போது யாதொரு சாக்குப்போக்குமின்றி அதைத் தாங்கிக் கொள்ள முடியாமலும், தங்களைத் தாக்கும்போது திருப்பித் தாக்காமல் இருக்க முடியாமலும், தங்களைத் தாழ்த்தும்போது உயர்த்தாமல் இருக்க முடியாமலும் அகங்காரிகளாய் இருக்கிற அந்த ஆசார பக்தரான கத்தோலிக்கரிநின்று தூரமாய் விலகி இருப்பீர்களாக.

உலகத்தினுடையவும் சரீரத்தினுடையவும் அனுமதிக்கப்பட்ட இன்பங்களையும் கூட பரித்தியாகம் செய்ய உங்கள் உடலையும் மனதையும் பழக்குவதற்கு, மயிர்ச் சட்டை, கசையடி போன்ற பலவிதமான தவக் கருவிகளைப் பயன்படுத்தி ஒறுத்தல் முயற்சிகளைப் பயிற்சி செய்யுங்கள். தன்னைத்தானே பரித்தியாகம் செய்யும் இம்முயற்சிகளை கிறிஸ்துநாதருடைய பாடுகளோடு சேர்த்து ஒப்புக்கொடுப்பதினால் பாவச் சோதனைகளுக்கு எதிராகப் போராடப் போதுமான வரப்பிரசாதங்களை அடைந்து கொள்கிறோம்.

(தவக்கருவிகளைப் பயன்படுத்துவது பற்றி ஆன்ம ஆலோசகரின் வழி காட்டுதலும் அனுமதியும் தேவை)

3. சிலுவையை நேசித்தல் 

"தன்  சிலுவையை அநுதினமும் சுமந்துகொண்டு" மகிழ்ச்சியுடன், அன்போடு அணைத்துக்கொண்டு, துணிவுடன் - இழுத்துக்கொண்டு அல்ல சுமந்துகொண்டு, இறக்கிவிடாமல், பாரத்தைக் குறைக்காமல், மறைத்து வைக்காமல், உயரமாய்த் தூக்கிக்கொண்டு முறைப்பாடோ முறுமுறுப்போ இன்றி சுமந்து செல்ல வேண்டும். 

ஒவ்வொருவருடைய சிலுவையும் கிறிஸ்து நாதராலேயே   அதன்  நீளம், அகலம், தடிமன், ஆழம் இவைகளுடன் செதுக்கிப் பொருத்தப்பட்டிருக்கிறது: 

அதன் "நீளம்" என்பது சில நாட்கள் அல்லது மாதங்கள் பழிச் சொர்க்களைத் தாங்கிக்கொள்வது அல்லது நோயுற்று படுக்கையில் கிடப்பது அல்லது பிச்சை எடுக்க நிர்ப்பந்திக்கப் படுவது அல்லது சோதனைகளினாலோ, ஆன்மீக வறட்ச்சியினாலொ, தனிமைப்படுத்தலினாலொ இன்னும் பல்வேறு அந்தரங்க சோதனைகளிநாலோ  துன்பப்படுவது.

அதன் "அகலம்" என்பது  நம்மைச் சூழ்ந்திருப்பவர்களாலும் நண்பர்களாலும் உடன் ஊழியர்களாலும் (உதவியாளர்களாலும்)  உண்டுபண்ணப்படுகிற கடுமையும் கசப்பும் மிகுந்த சந்தர்ப்பங்கள்.

அதன் "தடிமன்" என்பது தன் உடைமைகளை இழந்துபோவது, அவமானங்களுக்கு உள்ளாவது,  நிந்திக்கப் படுவது, துன்பங்கள், நோய்கள், மற்றும் தினமும் (அவ்வப்போது அல்ல) ஏன் சாவது வரையிலும் வருகிற ஆன்மீக சோதனைகள். 

அதன் "ஆழம்" என்பது யாதொரு மனிதனாலும்  ஆறுதலைக் கண்டடைய முடியாத வகையில் உண்டாகும் மறைந்த சோதனைகளும், அவன் உனக்கு எதிராக எழும்பி மேலும் மேலும் உன்னைத் துன்பத்துக்கு உள்ளாக்குவதும்.

நமதாண்டவரைப்போல் சிலுவையை  உனது "வீர வாளாகவும்" உனது "இராச்சியத்தின் செங்கோலாகவும்"  உன் தோளில் சுமந்துகொள். ஏனெனில் சேசு கிறிஸ்து  நாதருக்காக கொஞ்சம் துன்பப்படுவது போல்  அதிக அவசியமானதோ, அதிக நன்மையானதோ, அதிக உசிதமானதோ, அதிக மகிமையுள்ளதோ ஒன்றுமில்லை.

4. சேசு கிறிஸ்துநாதரை அநுசரிப்பது  (என்னைப் பின்செல்லட்டும்)  
     அதாவது கிறிஸ்துநாதரைப்போல் செயல்படுதல். (41-62)

     வெறுமனே துன்பப்படுதல் மட்டும் பற்றாது, ஏனனில் பசாசுகளும் உலகமும் கூட (பொது உடைமை வாதிகள்) தங்களுக்குள் வேத  சாட்சிகளைக் கொண்டுள்ளனரே! நாமோ கிறிஸ்துநாதர் தமது சிலுவையை எப்படி சுமந்தாரோ அப்படியே நமது சிலுவையைச் சுமக்க வேண்டும்.  
  1. கடவுளைப் பிரியப்படுத்துவதர்காகவும் ஆன்மாக்களின் இரட்சிப்புக்காகவும்!
   2. பேதைகளின் துர்மாதிரியை விலக்குவதற்காக (அதாவது துர்மாதிரிகையை விலக்குவதற்காக உனது நற்செயல்களைக் கூட செய்யாமல் இருப்பது.
            3. உன்னத நிலையை அடையும் முயற்சியைக் கைவிட்டு உன்னையே தாழ்த்துவது.
            4. சிலுவை பற்றிய பரம இரகசியங்களை அறிவதற்கு உருக்கமுடன் ஜெபித்து வேண்டிக்கொள்வது.  
             5. நீ ஒரு தவறு செய்ய நேரிட்டால் - அதனால் வரும் அவமானத்தை ஒரு தண்டனையாக அல்லது உனது ஆங்காரத்திற்குப பரிகாரமாக ஏற்றுக்கொள்.
             6. கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட சில வரங்கலை எடுத்துக்கூறி அதிலே சந்தோஷம் கொள்ளாதே.
              7. ஞான ஆங்காரத்தின் மட்டில் எச்சரிக்கையாயிரு.
                  * நீ ஆங்காரி என்பதை ஒத்துக்கொள்.
                 * உன் சிலுவைகள் எல்லாம் உன் பாவங்களுக்கான தண்டனைகள் என ஒத்துக்கொள் (அவைகள் தேவ சிநேகத்தின் விசேஷ அறிகுறிகள் அல்ல).
            * கடவுள் உன் பேரில் மட்டில்லாத பொறுதி உள்ளவராய் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள். 
   * நீ துன்பத்தில் பொறுமையாய் இருப்பது இயல்பான மனித நோக்கத்தினால் சாயமூட்டப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்.
    8. பெரிய சிலுவைகளைவிட வெளிக்குத்தேரியாத சிறிய சிலுவைகளைத் தெரிந்துகொள்.
         9. சிலுவையின் மேல் உனக்குள்ள சினேகமானது (புலன் உணர்வுக்கோ பகுத்தறிவுக்கோ உட்படாமல்) சுபாவத்திற்கு மேலானதாய் இருக்கட்டும். 
                 10. எவ்வித எதிர்பார்ப்போ தெரிந்தெடுப்போ இல்லாமல்  எல்லா வகையான சிலுவையையும் அனுபவிக்கத் தீர்மானமாய் இரு.
                  11. உன்னுடைய துன்பங்கள் கடவுளின் கண்களுக்கே தெரிந்ததாய் 
          * கடவுளின் கரங்களில் இருந்து வருவதுபோல்!
          * அவருடைய காயங்களிலும் துயரங்களிலும் தயவு பெற்றதாய்!
          *மோட்சத்தில் உனது முடியை சுதந்த்தரித்துக் கொள்ளக்கூடியதாய்!
            இருக்கும்படிப் பார்த்துக்கொள். 
                  12. ஒருபோதும் முறையிடாதே, அல்லது வேண்டுமென்று குறை சொல்லாதே:
                *சுபாவமாகவும் தானாகவும் எழும் முறைப்பாடு (அழுகையும் ஏக்கமும்)
               *பகுத்தறிவுடன் கூடிய முறைப்பாடு (மேலதிகாரிகலிடம் ஞாயத்தை எண்பிப்பது)
                      * பாவகரமான முறைப்பாடு (பழி வாங்குதல் அல்லது பொறுமை இழப்பது)
    13. தாழ்சியுடனும் நன்றி உணர்வுடனும் சிலுவையை அணைத்துக்கொள்.
                     14. ஆன்ம குருவானவரின் ஆலோசனைப்படி சில சிலுவைகளை தானாக முன்வந்து ஏற்றுக்கொள்.

      சிந்தனை:

    இந்த உலகத்திலே நாமாக முன்வந்து  தண்டனை அனுபவிப்போம், நமது சிலுவைகளை சுமப்போம்.  மறு உலகில் - ஒரே ஒரு பயனற்ற வார்த்தைக்காகவும் - கடைசி காசு வரையிலும் உத்தரிக்க வேண்டும். சாத்தானின் கரங்களிலிருந்து நமது சகல பாவங்களையும் அவற்றிற்குரிய தண்டனைகளையும் அவன் எழுதி வைத்திருக்கிற புத்தகத்தைக் கைப்பற்றி  வாசிக்க முடிந்தால், நமது கடன் சுமை எவ்வளவு பெரிதென்று நாம் அறிய வருவோதோடு, மறு உலகில் ஒரே ஒரு நாள் அனுபவிக்க வேண்டிய வேதனைகளை இந்த உலகில் எத்தனையோ ஆண்டுகள் அனுபவிப்பது எவ்வளவோ நல்லது என கண்டுணர்வோம். 

             சேசு நாதர் தம் சீடர்களுக்கு கூருகிறார்:

      "யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்,தியாகஞ்செய்து தன சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப்பின் செல்லக்கடவான். ஏனெனில் மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமம் சேதப்பட்டால் அவனுக்குப் பிரயோசனமென்ன? அல்லது தன் ஆத்துமத்துக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?  மனுமகன் தம்முடைய பிதாவின் மகிமையிலே தன தூதர்களோடு கூட வருவார்.அப்பொழுது ஒவ்வொருவனுக்கும் அவனவன் கிரிகைகளுக்குத் தக்கதாகப் பலன் அளிப்பார்". (மத். 16: 24-27)

         ஞான வாசகம்:

      கிறிஸ்து நாதர் அனநுசாரம் 
      முதற்  காண்டம், அதிகாரம் 1


          கிறிஸ்து நாதரைக் கண்டுபாவித்தலும்  
     உலக வீண் பெருமைகளையெல்லாம் நிந்தித்தலும் 

    1. - "நம்மைப் பின் செல்லுகிறவன் அந்தகாரத்தில் நடப்பதில்லை" என்று ஆண்டவர் திருவுளம்பற்றி இருக்கிறார். இது கிறிஸ்து நாதருடைய வாக்கியம். ஞானத் தெளிவடையவும் இருதயக் குருட்டாட்டம் எல்லாவற்றிலும் நின்று மீட்கப்படவும் நாம் மெய்யாகவே ஆசிப்போமானால், அவருடைய ஜீவியத்தையும் நடக்கைகளையும் நாம் கண்டுபாவிக்க வேண்டுமென்று அந்த வார்த்தைகளால் நமக்குக் கற்பிக்கப்படுகின்ற்றது. ஆனதால் சேசு கிறிஸ்து நாதருடைய ஜீவியத்தை தியானிப்பதே நமது உத்தம படிப்பாய் இருக்கக்கடவது.

 2. - கிறிஸ்து நாதருடைய போதகம் அர்சிஸ்டவர்களுடைய சகல போதகங்களிலும் மேலானதாய் இருக்கின்றது. ஞானமுள்ளவன் அதில் மறைந்திருக்கும் மன்னா வென்னும் அற்புத போஜனத்தைக் காண்பான். ஆனால் கிறிஸ்து நாதருடைய உணர்ச்சி அநேகருக்கு இல்லாதபடியால், அவர்கள் சுவிசேஷத்தை அடிக்கடி கேட்டும், அதில் அற்ப பிரியம் மாத்திரம் கொள்ளும்படி நேரிடுகின்றது. கிறிஸ்து நாதருடைய வாக்கியங்களைப்  பூரணமாயும் இன்பத்துடனும் கண்டுபிடிக்க ஆசை உள்ளவன் தன்  முழு ஜீவியத்தையும் கிறிஸ்து நாதருடைய ஜீவியத்திற்கு ஒத்ததாய் ஆக்க கவனிக்க வேண்டியது. 

 3. - உன்னிடத்தில் தாழ்ச்சி இல்லாமையால், நீ பரிசுத்த தம திரித்துவத்திற்குப் பிரியப்படாதிருக்கும்போது, அந்த திரித்துவத்தைப் பற்றித் தர்க்கிப்பதில் உனக்கென்ன பிரயோஜனம்? உண்மையாகவே, சிறந்த வார்த்தைகள் ஒருவனை அர்ச்சிஷ்டவனும் நீதிமானும் ஆக்கப்போவதில்லை; ஆனால் புண்ணிய ஜீவியமோ அவனை சர்வேசுரனுக்கு உகந்தவன் ஆக்குகின்றது. மனஸ்தாபம் இன்னதென்று அறிவதைவிட மனஸ்தாபப்பட அதிகமாய் ஆசிக்கிறேன். நீ வேதாகமம் முழமையும், சகல ஞானிகளுடைய வாக்கியங்களையும் வெளியரங்கமாய் அறிந்தாலும், தேவ சிநேகமும் இஷ்டபிரசாதமும் உன்னிடம் இல்லாவிடில், அதெல்லாம் எதற்குப் பிரயோஜனம்? சர்வேசுரனை நேசிப்பதும் அவர்  ஒருவருக்கு ஊழியம் பண்ணுவது மாத்திரமே தவிர மற்றதெல்லாம் "வியார்த்தங்களில் வியர்த்தம், எல்லாம் வியர்த்தம்" உலகத்தை நிந்தித்து மோட்ச இராச்சியத்தைத் தேடுவதே உத்தம ஞானம். 
     
    4. - ஆனதால் அழிந்துபோகிற ஆஸ்திகளைத் தேடுவதும், அவைகள் மேல் நம்பிக்கை வைப்பதும் வியர்த்தம். பெருமைகளை அபேட்சிப்பதும், மேலான ஸ்திதிக்கு தன்னைத்தான் உயர்த்துவதும் வியர்த்தம். சரீரே இச்சைகளைப் பின்பற்றுவதும், பின்னிட்டு தண்டனைக்குப் பாத்திரமாகக்கூடுமான யாதொன்றை ஆசிப்பதும் வியர்த்தம். நீடிய ஜீவியத்தை விரும்புவதும், நல்ல ஜீவியத்தைப்பற்றி அற்ப கவலை மாத்திரம் படுவதும் வியாத்தம். தற்கால ஜீவியத்தை மாத்திரம் கவனிப்பதும், வருங்கால ஜீவியத்தைப் பற்றி முன் யோசியாதிருப்பதும் வியர்த்தம். வெகு துரிதமாய் கடந்து போவதை நேசிப்பதும், நித்திய சந்தோசம் இருக்கும் இடத்திற்கு துரித்ப்படாதிருப்பதும் வியர்த்தம். 

 5. - "கண், பார்த்து திருப்தி அடைவதில்லை; காத்து, கேட்டுப் பூரிப்பாவதில்லை" என்ற பழமொழியை அடிக்கடி ஞாபகப் படுத்திக்கொள். ஆனதால்  வஸ்துகளை உன் மனதினின்று அகற்றி காணப்படாத வஸ்துக்களின்மேல் உன் கருத்தைச் செலுத்தவும் கவனி. ஏனெனில் தங்கள் சிற்றின்பத்தைப் பின்செல்லுகிறவர்கள் மனச்சாட்சியை அசுத்தப்படுத்தி சர்வேசுரனுடைய இஷ்டப் பிரசாதத்தைப் போக்கடிக்கிரார்கள்.


யோசனை         

          இவ்வுலகில் நமக்கு ஒரேயொரு கவலையுண்டு. அதாவது, நமது ஈடேற்றத்தின் கவலை. சேசு கிறிஸ்த் நாதரிடத்திலும், சேசு கிறிஸ்து நாதராலேயுமே தவிர மற்றபடி எவனும்   ஈடேற்றமடையப் போவதில்லை. அவருடைய போதனைகளை விசுவசிப்பதிலும், அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதிலும் அவருடைய புண்ணியங்களைக் கண்டுபாவிப்பதிலும் தான் நமது ஜீவியம் அடங்கியிருக்கின்றது, வேறொன்றிலுமல்ல. மற்றதெல்லாம் வியர்த்தம். "சூரியனின்கீழ் மனிதன் செய்யும்  வேலைகளெல்லாம் வியர்த்தம் என நான் கண்டேன்" என்று ஞானியானவர் சொல்லுகிறார். பிரேதம் குழியில் எறியப்படும் போதும், ஆத்துமம் நித்தியத்திற்  சேரும் போதும், ஆஸ்தியினாலும், சுகத்தினாலும், பெருமையினாலும் உண்டாகிற பிரயோஜனம் என்ன? இன்றைக்கே, இந்த நிமிஷம் முதற்கொண்டு நினைத்துப்பார்; ஏனெனில் நாளையதினம் சில வேலை நேரமிராது. நாள் ஒவ்வொன்றாய்க் கடந்து போகும்போதே பிரயத்தனம் செய். அழிந்து போகாத திரவியத்தைச் சேகரிக்கத் துரிதப்படு. "இரவு காலம் வரப்போகின்றது, அப்போது யாதொன்றும் செய்ய முடியாது." பிரயோசனமற்ற ஆசியால் மாத்திரம் நீ ஈடேற்றம் அடையப் போவதில்லை. சர்வேசுரன் கிரிகைகள் வேண்டும் என்கிறார். ஆனதால் சேசு நாதரோடு நித்தயத்திற்கும் ஜீவிக்க உனக்கு மனதுண்டானால் சேசு நாதரைக் கண்டு பாவித்து நட.